சிவராசா அனோஜனின் மரண தண்டனை இரத்து - அவர் பாதுகாப்பாக இலங்கை திரும்பும் வரை எமது முயற்சிகள் தொடரும்..!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் வழக்கில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மனப்பூர்வமாக வரவேற்றுள்ளார்.

​இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

​சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் வந்துள்ளமை, அவரது குடும்பத்தினருக்கும், அவருக்காக அயராது பாடுபட்ட அனைவருக்கும் பெரும் ஆறுதலையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது.

​இந்த நம்பிக்கையளிக்கும் முன்னேற்றமானது, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், அரசியல் மற்றும் மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அக்கறையுள்ள பொதுமக்கள் ஆகியோரின் கூட்டுமுயற்சிகளையும் ஒற்றுமையையுமே பிரதிபலிக்கின்றது.

​இந்த முக்கியமான முன்னேற்றத்தை நாம் வரவேற்கின்ற அதேவேளை, எமது முயற்சிகள் இத்துடன் முடிவடையவில்லை. தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் உரிய சட்டச் செயல்முறைகளும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, சிவராசா அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்படும் நாளிலேயே எமது முயற்சி முழுமை பெறும்.

​சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கும் சட்ட நடைமுறைகளுக்கும் அமைவாக, அவரை இயன்றளவு விரைவாகப் பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்வதற்காக இலங்கை மற்றும் சவூதி அரேபிய அதிகாரிகள் தங்களுக்கிடையிலான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என நான் மனப்பூர்வமாக நம்புகின்றேன்.

​இந்தக் கூட்டுமுயற்சிக்குப் பங்களித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

அவர்களது அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் ஒற்றுமை அளப்பரியவை.

​இன்று இந்தச் சாதகமான முன்னேற்றத்தை நன்றியுணர்வுடனும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் வரவேற்கின்றோம்.

எனினும், சிவராசா அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்குத் திரும்பி, தனது அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணையும் நாளே நாம் உண்மையாகக் கொண்டாட வேண்டிய நாளாகும் எனத் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை