திருகோணமலை சாம்பல்தீவு சந்திக்கு அருகில் மூன்று முச்சக்கர வண்டிகளும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தொடர்புபட்டு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியில், உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு சந்திக்கு அருகில் சனிக்கிழமை (24.10.2026)ஆம் திகாதி மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எதிரெதிரே பயணித்த இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதியதைத் தொடர்ந்து, வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றொரு முச்சக்கர வண்டியும் விபத்தில் சிக்கியுள்ளன.
இந்த விபத்தில் செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த சங்கரதாஸ் சந்திரதாஸ் (58) என்பவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், ஞாயிற்றுக்கிழமை இன்று (25.10.2026) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மடத்தடி சந்தியிலிருந்து தனது மனைவியுடன் கோணேசபுரி நோக்கிப் பயணித்தபோதே அவர் இந்த விபத்தில் சிக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் இருவர் உட்பட நால்வர் காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.