இலங்கையின் மதுரை மீனாட்சி ஆலயம் எனப் பக்தர்களால் போற்றப்படும், கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருச்சடங்கு மகா சக்திப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சக்தி மகா யாகம் இன்று (20.10.2026) செவ்வாய்க்கிழமை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தின் வருடாந்த மகா சக்திப் பெருவிழா கடந்த 10.10.2026ஆம் திகதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
அன்றைய தினம் இரவு திருக்கதவு திறத்தல் மற்றும் அம்மன் எழுந்தருளல் நிகழ்வுகள் பக்திபூர்வமாக இடம்பெற்றதுடன், ஆலயப் பரிவார மூர்த்திகளுக்கும் விசேட பூசைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்றுவரும் இத்திருவிழாவில், தினமும் பல்வேறு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இன்று நடைபெற்ற சக்தி மகா யாகத்துடன், நோர்ப்பு நெல் குத்துதல், நோர்ப்புக் கட்டுதல், ஊர்காவல், மதுக்கொடுத்தல், பலிபூசை மற்றும் தீமூட்டுதல் உள்ளிட்ட பாரம்பரியச் சடங்குகளும் இடம்பெறவுள்ளன.
இவ்விழாவில் பெரியபோரதீவு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுடன், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்த பெருந்திரளான பக்தர்களும் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
தீமிதிப்பு விழா நாளை!
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதிப்பு விழா நாளை (21.10.2026) புதன்கிழமை காலை 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் கொடியிறக்கத்துடன் வருடாந்த திருச்சடங்கு மகா சக்திப் பெருவிழா நிறைவுபெறவுள்ளது.
வரலாற்று மற்றும் ஆன்மீகச் சிறப்புமிக்க இப்பெருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினரும் தொண்டர்களும் இணைந்து சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர்.
திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கிழக்கிலங்கையின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்கும் பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு, பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.