வங்காள விரிகுடாவின் தென்மேற்கு மற்றும் மேற்குப் பகுதியின் மத்தியுடன் இணைந்து காணப்படுகின்ற "முரசு" சூறாவளியானது காங்கேசன்துறையிலிருந்து வடக்கு - வட கிழக்குத் திசையில் சுமார் 480 km தொலைவில் நேற்று இரவு 11.30 மணியளவில் நிலை கொண்டிருந்தது.
இது மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்வதுடன் மேலும் தீவிரமடைந்து அடுத்துவரும் மூன்று மணித்தியாலங்களில் வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் மிகப் பலமிக்க சூறாவளியாக வலுவடையும். இதன் பிற்பாடு வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து சென்று தென் ஆந்திரப் பிரதேச கரையின் நெல்லூருக்கும் நாசப்பூருக்கும் இடையாக இன்று நள்ளிரவுக்கும் நாளை அதிகாலைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவ சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மத்திய , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
கடல் பிராந்தியங்களில்
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு
25 - 35 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது தென் திசையில் இருந்து காற்று வீசும்.
சிலாபம் தொடக்கம் கொழும்பு , காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான கௌரவ கலாநிதி
மொஹமட் சாலிஹீன்.