மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பேத்தாழையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ பாலீஸ்வரர் ஆலயத்தில் கேதார கௌரி விரதத்தின் நிறைவு நாள் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இன்று (09.11.2026) ஆம் திகதி பக்தி பூர்வமாக நடைபெற்றன.
கடந்த (20.10.2026 )ஆம் திகதி அன்று ஆரம்பமான 21 முடிச்சுகளைக் கொண்ட கேதார கௌரி விரதத்தை அனுஷ்டித்து வந்த அடியார்களின் விரத நிறைவையொட்டி, விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்போது கும்பம் சொரிதல், தீர்த்தப் பூஜை உள்ளிட்ட பாரம்பரிய சமயச் சடங்குகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.
விரதம் அனுஷ்டித்த அடியார்கள் மற்றும் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.
21 முடிச்சுகளைக் கொண்ட புனிதக் காப்பு பூஜை வழிபாட்டில் வைக்கப்பட்டு, நேற்று (08.11.2026) ஆம் திகதி காப்புக் கட்டும் நிகழ்வு இடம்பெற்றதைத் தொடர்ந்து, இன்று விரத நிறைவு வழிபாடுகள் நடைபெற்றன.
இறையருள் வேண்டி பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், ஆலயச் சூழல் ஆன்மீக எழுச்சியுடனும் பக்திப் பரவசத்துடனும் காணப்பட்டது.