மட்டக்களப்பு வெல்லாவெளி கலாசார மண்டபத்தின் முகப்புக் கேற்றை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்!

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வெல்லாவெளி கலாசார மண்டபத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த பெரிய இரும்புக் கேற்றை உடைத்து, பாதுகாப்பு வேலிகளையும் காட்டுயானைகள் சேதப்படுத்திய சம்பவம் இன்று (05.11.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

காட்டுயானைகள் கலாசார மண்டபத்தின் முகப்புக் கேற்றை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கு பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலிகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளன.

குறித்த கலாசார மண்டபம் ஏற்கனவே காட்டுயானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது தடவையாகவும் சேதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெல்லாவெளி மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதுடன், பொதுமக்களின் வீடுகளையும் யானைகள் உடைத்து சேதப்படுத்தி வருகின்றன. 

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடனும் கவலையுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

பொதுச் சொத்துக்கள் மட்டுமன்றி, மக்களின் குடியிருப்புகளும் தொடர்ச்சியாக காட்டுயானைகளால் சேதப்படுத்தப்பட்டு வருகின்றமையால், இப்பிரச்சினைக்கு உரிய அதிகாரிகள் நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

காட்டுயானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மனித உயிர்கள் காவுகொள்ளப்படும் துயரமான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முன்னர், காட்டுயானை–மனித மோதலுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
புதியது பழையவை