மட்டக்களப்பில் குடிநீர்த் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு! கிராம மக்கள் மகிழ்ச்சி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மணிபுரம் கிராமம் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புல்லுமலை தும்பாலஞ்சோலை கிராமம் ஆகியவற்றுக்கான குடிநீர் வழங்கல் திட்டங்கள் இன்று (05.11.2026)ஆம் திகதி  உத்தியோகபூர்வமாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கையளிக்கப்பட்டன.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், குடிநீர்த் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கிய கொழும்பு லயன்ஸ் கழகப் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட லயன்ஸ் கழக ஆளுநர் உள்ளிட்ட உறுப்பினர்கள், நற்குண முன்னேற்றக் கழகப் பிரதிநிதிகள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள் கிராம மக்களால் பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

பல ஆண்டுகளாகக் குடிநீர் வசதியின்றிப் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவந்த இரு கிராம மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த குடிநீர்த் திட்டங்களைத் தமது கிராமங்களுக்குப் பெற்றுக்கொடுக்க முயற்சிகளை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கிராம மக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இத்திட்டங்களைச் செயற்படுத்துவதில் பங்களிப்புச் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், நற்குண முன்னேற்றக் கழகத்தின் கொழும்பு திட்டப் பணிப்பாளர் எட்வின், மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் எஸ். சுந்தரலிங்கம் அதிபர், கொழும்பு லயன்ஸ் கழகத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை சார்பில் பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் நன்றிகளைத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கொழும்பு லயன்ஸ் கழக மற்றும் மட்டக்களப்பு மாவட்ட லயன்ஸ் கழகப் பிரதிநிதிகள் உரையாற்றியதுடன், இரு கிராமங்களுக்குமான குடிநீர்த் திட்டங்கள் உத்தியோகபூர்வமாகப் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வவுணதீவு பிரதேச சபைத் தவிசாளர் கோபாலப்பிள்ளை, லயன்ஸ் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஆளுநர் சாகீர் அகமட் மற்றும் அவரது பாரியார் அசினா, லயன் லோகேந்திரன், கொழும்பு லயன்ஸ் கழகத் தலைவர் பிரவா தர்மரத்ன, திட்டத் தலைவர் மற்றும் நிதி உதவியாளர் இனோகா டி சில்வா, வலயத் தலைவர் தெவிகா பெர்னாண்டோ, லயன்ஸ் கழகச் செயலாளர் பிரிசிலா, கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.பி. பண்டார, பிரதேச சபை உறுப்பினர்களான சி. சிவானந்தன், அ. நிதர்சன், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் அருணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், நற்குண முன்னேற்றக் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் எஸ். சுந்தரலிங்கம் அதிபர், சமூகச் செயற்பாட்டாளர் நாராயணசாமி, பாடசாலை அதிபர் சங்கர், பிரதியதிபர் சிவதனேஸ், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள், ஆலயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

பல ஆண்டுகளாகத் தாம் எதிர்கொண்ட குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துள்ளமை குறித்து இரு கிராம மக்களும் பெரும் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர்.

புதியது பழையவை