அம்பாறை கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் விமரிசையாக இடம்பெற்ற கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்வு!

அம்பாறை மாவட்டம், கோளாவில் பகுதியில் வரலாற்றுப் பெருமையும் ஆன்மீகச் சிறப்பும் கொண்ட ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில், ஆறுமுகப் பெருமானின் அருளைப் பெறும் நோக்கில் பக்தர்களால் ஆறு நாட்களாக அனுஷ்டிக்கப்பட்ட கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாள் நிகழ்வான சூரசம்ஹாரம், இன்று (15.11.2026) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மிகவும் விமரிசையாகவும் பக்தி பூர்வமாகவும் இடம்பெற்றது.

கடந்த (10.11.2026)ஆம் திகதி ஆரம்பமான கந்த சஷ்டி விரதத்தின் நிறைவாக இடம்பெற்ற இச்சூரசம்ஹார நிகழ்வைக் காண்பதற்காகப் பெருந்திரளான பக்தர்கள் ஆலய வளாகத்தில் ஒன்றுகூடினர்.

சூரபத்மன் என்னும் அசுரனை முருகப்பெருமான் வதம் செய்து தேவர்களைக் காத்த தெய்வீகத் திருவிளையாடலை நினைவுகூரும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, பக்தர்கள் அரோகரா எனும் பக்தி முழக்கத்துடன் முருகப்பெருமானை வழிபட்டனர்.
ஆலயத்தின் தொன்மையான வழிபாட்டு மரபுகளையும் இந்து சமயத்தின் ஆன்மீகப் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வு, பக்தர்கள் மத்தியில் பெரும் பக்திப் பரவசத்தையும் ஆன்மீக உணர்வையும் ஏற்படுத்தியது.

சூரசம்ஹாரம் என்பது தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டும் தத்துவத்தை உணர்த்துவதுடன், மனித மனங்களில் குடிகொண்டிருக்கும் ஆணவம், அகங்காரம், பொறாமை போன்ற தீய எண்ணங்களை அகற்றி அன்பு, அறம், ஒற்றுமை, உண்மை ஆகிய நற்பண்புகள் மேலோங்க வேண்டும் என்ற உயரிய செய்தியையும் எடுத்துரைக்கின்றது.

இந்நிலையில், கந்த சஷ்டி விரதத்தின் நிறைவு நாளான நாளை (16.11.2026) ஆம் திகதி திங்கட்கிழமை காலை திருக்கல்யாண உற்சவம் இடம்பெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து விரதம் அனுஷ்டித்த பக்தர்கள் பாரணை செய்து தமது ஆறு நாள் விரதத்தை நிறைவு செய்யவுள்ளனர்.

பழமையும் பெருமையும் மிக்க கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் இடம்பெறும் இத்தகைய சமய நிகழ்வுகள், எமது இந்து சமயப் பாரம்பரியத்தையும் பண்பாட்டு விழுமியங்களையும் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் முக்கிய அடையாளங்களாகத் திகழ்கின்றன.

கந்த சஷ்டி விரதத்தைப் பக்தியுடன் அனுஷ்டித்த அனைவருக்கும் முருகப்பெருமானின் திருவருளும் ஆசியும் கிடைக்கப் பிரார்த்திப்போம்
புதியது பழையவை