போரதீவுப்பற்று சங்கபுரம் பொதுநூலகத்தில் நடைபெற்ற வாசிப்பு மாத பரிசளிப்பு விழா – மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கிக் கௌரவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட 13ஆம் கிராமமான சங்கபுரம் பொதுநூலகத்தில், 2026ஆம் ஆண்டுக்கான வாசிப்பு மாத பரிசளிப்பு விழா நேற்று முன்  (17.11.2026)ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

சங்கபுரம் பொதுநூலக வாசகர் வட்டமும் பொதுமக்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, வாசகர் வட்டத்தின் தலைவர் செ. சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் மற்றும் சின்னவத்தை வட்டார உறுப்பினர் கா. யோகராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி. குகநேசன், பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் த. நிதிவதனன் ஆகியோருடன் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், நூலக உதவியாளர்கள், கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகத்தினர்,விளையாட்டுக் கழகங்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், அதிதிகள் வரவேற்பு, பொன்னாடை போர்த்திக் கௌரவித்தல், சஞ்சிகை வெளியீடு, வரவேற்பு நடனம், வரவேற்புரை மற்றும் தலைமையுரை உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.

2027ஆம் ஆண்டில் சங்கபுரம் பொதுநூலகம் நவீனமயப்படுத்தப்படும் – தவிசாளர் அறிவிப்பு!

இதன்போது உரையாற்றிய போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன், சின்னவத்தை வட்டாரத்தின் அபிவிருத்திக்காக இதுவரை கூடுதலான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்று பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் 2027ஆம் ஆண்டிலும் இப்பகுதிக்கு அதிகளவிலான நிதியை ஒதுக்கி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் எமது பிரதேச சபையும் கூடுதலான நிதியைப் பெற்றுக்கொண்டு பத்து வட்டாரங்களுக்கும் நிதியைப் பகிர்ந்தளித்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், 2027ஆம் ஆண்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதுடன், சங்கபுரம் பொதுநூலகத்தையும் நவீனமயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்னுரிமை – உறுப்பினர் கா. யோகராசா!

தொடர்ந்து உரையாற்றிய சின்னவத்தை வட்டார உறுப்பினர் கா. யோகராசா, சின்னவத்தை வட்டாரத்தில் பல்வேறு வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன், அப்பகுதியில் காணப்படும் வீதிப் பிரச்சினைகள், குடிநீர் வசதி, தெருவிளக்குகள், மயானம், அஞ்சலிப் பீடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் மற்றும் காட்டு யானைகளின் தொல்லை போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

குறித்த பிரச்சினைகளை அடையாளம் கண்டு, தவிசாளரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் கூடுதலான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்று மக்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இவ்வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு கிராம மக்களும் கிராம மட்ட அமைப்புகளும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், அறிவுத் தேடலை விரிவுபடுத்துதல், நூலகப் பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் நூலகச் செயற்பாடுகளை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வாசிப்பு மாத பரிசளிப்பு விழா சிறப்பாக நிறைவடைந்தது.
புதியது பழையவை