தமிழ் முஸ்லிம் மக்களை பிரித்தாள நினைக்கும் சிங்கள அரசின் எண்ணத்துக்கு நாம் யாருமே துணைபோகக்கூடாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நாம் சிறுபான்மையினர் இல்லை என்றும் எண்ணிக்கையில் மட்டும்தான் இங்கு சிறு தொகையினராக உள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினமும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் தாழங்குடாவிலிருந்து திருகோணமலை வரை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது காத்தான்குடியில் வைத்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
”கடந்த இரு நாட்களாக இந் நடைபயணத்தில் பங்குபெற்று ஆதாரவளித்த அனைத்து மக்களுக்கும் எமது நன்றிகள். இலங்கை அரசாங்கத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் அடக்குமுறைகளை எதிர்க்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற இவ் அகிம்சைவழிப் போராட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க எதிர்வரும் நாட்களிலும் அணிதிரண்டு வருவீர்களென நம்புகின்றோம்.” என்றார்.