வடக்கு, கிழக்கில் கறுப்பு கொடிகளை பறக்க விடுங்கள்


மன்னார் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் கறுப்பு கொடி பறக்க விட அனைவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆயரின் மறைவு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,
தமிழ்த் தேசிய மண்ணிலே தமிழ் மக்களுடைய உரிமைக்காகவும் அவர்களுடைய வாழ்வுக்காகவும் ஒரு நீண்ட பெரும் பாதையிலே தன்னுடைய ஆழமான பங்கினை ஆத்மார்த்தமாகவும், உணர்வாகவும் வெளிப்படுத்திய ஆன்மா ஒன்று மீளாத்துயரில் உறங்கிக் கொண்டிருக்கின்றது.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீது அதிகமான பற்றுக் கொண்ட ஒரு மனிதனாக நின்று அவர் தன்னை அர்ப்பணித்து இன்று உறக்கம் கொள்கின்ற அவரை நினைக்கும் போது நெஞ்சம் துடிக்கின்றது.

இப்படியான ஒரு ஆயர் இனிக் கிடைப்பாரா என்பது சந்தேகமே. இலங்கையினுடைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் சென்று மிகத் துணிச்சலோடு ஆதாரத்தோடு ஒரு இலட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போய் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை வெளிப்படையாக சொன்ன ஒரு மனிதர்.

அவருடைய இறுதி திருப்பலி நடைபெறும் நாளான எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு கிழக்கு எங்கும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் கறுப்பு கொடிகளோடு அவருடைய உருவப்படங்கள் தாங்கிய நிலையில் அஞ்சலி செலுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நான் கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.
புதியது பழையவை