வருடா வருடம் நவீன கல்வி முறைமைக்கு ஏற்றாற்போல் அரச பாடசாலைகளுடைய உட்கட்டுமானங்களும் பௌதீக வளங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன் 1000 பாடசாலைகள் திட்டம், புதிய தேசிய பாடசாலைகள் திட்டம், அயல் பாடசாலை மிக நல்ல பாடசாலை திட்டம் போன்ற பல திட்டங்களை அறிமுகப்படுத்தி பாடசாலை வளங்களை பெருக்குவதற்கு பெருந்தொகையான பணத்தை அரசாங்கம் செலவு செய்து நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் தரமானதும் சமமானதுமான கல்வி கிடைக்க வேண்டுமென செயலாற்றி வருகின்றது.
இருந்தபோதிலும் தற்போதைய சூழலில் இலவசக் கல்வியால் மாணவர்கள் பயனடையும் நிலை மாற்றப்பட்டு வருகின்றது. சகல வளங்களும் நிறைந்த பாடசாலை கட்டடங்களில் ஆறு மணி நேரம் கற்பிக்க முடியாத கல்வியை சில ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களில் ஒரு மணி நேரத்தில் கற்பிக்கும் வித்தையை கடைப்பிடித்து வருகின்றனர். அரசாங்க ஊதியம் பெறும் ஆசிரியர்கள் பலர் பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளில் தமது முழுமையான ஈடுபாட்டை செலுத்துவதை விடுத்து தமது மேலதிக வருமானத்திற்காக பிரத்தியேக அல்லது தனியார் வகுப்புக்களில் ஆர்வம் காட்டி வருவதுடன் பாடசாலைக்கு வெளியே தமது கட்டணம் அறவிடப்படும் வகுப்புக்கு வராத மாணவர்களை பாடசாலையில் பழிவாங்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது,
வாரத்தில் மூன்று நாட்கள் வீதம் மாதம் ஒன்றுக்கு ஒன்பது நாட்கள் ஒரு மணி நேரம் கற்பிப்பதற்கு ரூ. 1000 தொடக்கம் ரூ.3000 வரையிலான கட்டணங்கள் அறவிடப்படுகிறது ஏழை மாணவர்களும் சமமான கல்வியை பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இலவச கல்வி திட்டத்தின் கீழ் ஆசிரியராக பணியாற்றும் இவர்கள் பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் அதிகளவான கட்டண கல்வியினை வழங்கி வருவதனால் பாடசாலை கல்வியில் அக்கறை செலுத்தாது பாடசாலை நேரங்களில் வலயக் கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டிய கற்பித்தல் செயற்பாடுகளுக்கான ஆவணங்களை தயாரிப்பதிலும் வீடுகளில் மேற்கொள்ளவேண்டிய வினாத்தாள் திருத்தம் போன்ற பணிகளையும் பாடசாலைகளில் செய்து வருகின்றனர் தனியார் வகுப்புக்களில் கல்வி கற்றால்தான் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளில் சித்தி பெற முடியும் என்ற நிலைக்கு மாணவர்கள் சென்றுள்ளனர். இதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் தற்பொழுது கல்விக்கான விற்பனை விலை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.
இலங்கையிலே யுத்தம் இடம்பெற்ற காலங்களில் வன்னிப் பெருநிலப்பரப்பு உட்பட வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் கற்பித்த ஆசிரியர்கள் பல இடப்பெயர்வுக்கு மத்தியிலும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற ஊதியத்தை தவிர வேறு எந்த வருமானங்களையும் பெறாமல் போதிய உட்கட்டுமான வசதிகள் அற்ற தற்காலிக கட்டடங்களிலும் மர நிழல்களில் வீதிகளிலும் கல்வி கற்பித்து வந்தது யாவரும் அறிந்ததே. அப்போது பாடத்திட்டங்களை பாடசாலையில் முடிக்க முடியாமல் போகின்ற சந்தர்ப்பங்களில் மேலதிக வகுப்புக்களை இலவசமாக நடத்தியே மாணவர்களை பரீட்சைகளில் சித்தி பெற வைத்தனர். அதையும் மீறி தனியார் வகுப்புக்களை நடத்துகின்ற ஆசிரியர்கள்கூட மாதம் முழுவதும் நேரம் பாராது கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன் கட்டணமாக மிகவும் குறைந்த கட்டணங்களையே அறவிட்டு வந்தனர் ஆனால் தற்பொழுது சாதாரண தரம் படிக்கின்ற ஒரு மாணவர் மாதமொன்றுக்கு குறைந்தது 8000 ரூபா பணத்தை தனியார் கல்வி நிலையங்களுக்கு செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பல பில்லியன் செலவில் இலவசக் கல்வியை பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை வழங்கி வரும் நிலையில் அந்த இலவசக் கல்வியின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் தனியார் வகுப்புக்களில் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.
அதை வடவும் தனியார் வகுப்புக்களை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் அதற்கான முறையான அனுமதி எதுவும் தேவையிலலை தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுகின்ற கட்டடங்கள் அல்லது கொட்டைகளின் தரம் தொடர்பில் எந்தவிதமான கட்டுப்பாடுகளுமின்றி தனியார் வகுப்புகள் நடக்கும் முறைகேடுகளை அல்லது பாலியல் துஷ்பிரயோகங்களை மேற்பார்வை செய்வதற்கான எந்த ஒரு பொறிமுறையும் இல்லாமல் தமது விருப்பம்போல் தனியார் கல்வி நிலையங்களை கல்வி விற்பனை நிலையங்களாக நடத்தி வருகின்றனர் சகல வசதிகளும் கொண்ட பாடசாலை கட்டமைப்பிற்குள் கற்பிக்க முடியாத கல்வியை அதே ஆசிரியர்களால் எந்தவித வசதிகளும் அற்ற வெறும் தகரக் கொட்டகைக்குள் கற்பிக்க முடிந்தது என்றால் இந்தக் கல்விச் சமூகம் எமது மாணவர்களை எதை நோக்கி கொண்டு செல்கின்றது என்ற கேள்வி எழாமல் இல்லை.
இதில் பெற்றோர்கள் தனியார் கல்வி நிலையங்களில் கொண்டுள்ள நம்பிக்கையினாலும் மோகத்தினாலும் மாணவர்களை தனியார் கல்வி நிலையங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்பி வைப்பதுடன் ஓய்வெடுக்க வேண்டிய விடுமுறை தினமாகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் தனியார் கல்வி நிலையங்கள் தொடர்ந்து இயக்கப்படுவது மாணவர்களுக்கு உள ரீதியான தாக்கம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதுடன் அவர்களின் கல்வி தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளையும் மழுங்கடிக்கின்றது.
இதில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு விடயம் என்னவெனில் பாடசாலைகளில் மிகவும் கண்டிப்பான ஆசிரியர்களாக செயற்படுகின்ற ஆசிரியர்கள் பலர் தமது தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்கள் மீது மென் போக்கை கடைபிடிப்பது அவர்களுக்கு பணம் சம்பாதிப்பதில் இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றது பாடசாலைகளில் எதற்கெடுத்தாலும் மாணவர்களை பேசுகின்ற அல்லது அடிக்கின்ற ஆசிரியர்கள் தனியார் வகுப்புகளில் சினேக பூர்வமான கற்பித்தலை மேற்கொண்டு வருவது முரணாகவே உள்ளது.
அரசாங்க ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களை நடத்தி அதற்கான கட்டுப்பாடுகளை விதிப்துடன் தனியார் கல்வி நிலையங்களில் செயற்பாடுகளை முறைப்படுத்தி சரியான பாதையில் கொண்டுசெல்ல தவறும்பட்சத்தில் பாடசாலைகள் வெறுமனே பெயரளவில் இயங்க வேண்டிய நிலைக்கும் தனியார் வகுப்புகளுக்காக மாணவர்கள் பல ஆயிரம் ரூபாய்களை செலவுசெய்ய வேண்டிய நிலையும் தொடருமானால் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கமும் இலவச கல்விக்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளும் பயனற்றதாகவே முடியும்.
ஜனகன் நடராசா.
