மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு ஆற்றுவாய்ப் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாலமீன்மடு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பாக்கியராஜா ரமேஷ் எனும் 28 வயதுடைய குறித்த குடும்பஸ்தரே நேற்று (29) மாலை ஆற்றுவாய் பகுதியை அண்மித்த ஆற்றிலேயே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். சம்பவம் பற்றி தெரியவருவதாவது
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப வறுமை நிலை காரணமாக தனது மனைவியுடன் குறித்த வாவி பகுதியில் மட்டி எடுக்க சென்ற குறித்த குடும்பஸ்தர் மட்டிகளை சேகரித்த பின் மனைவியை வாவியின் கரைக்கு அனுப்பிவிட்டு குடும்பஸ்தர் மீண்டும் மட்டி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள வேளையிலே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் .
அதனைத் தொடர்ந்து பொதுமக்களும் படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது காணாமல் போயிருந்த இளைஞர் இன்று 30-05-2021ம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.


