மாந்தை காடழிப்பு-உடனடியாக களத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்


மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கள்ளியடி பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்குவதாக உறுதி அழிக்கப்பட்ட காணிகளை தனி நபர் ஒருவர் அபகரித்து காடுகளை அழித்து அத்துமீறி செயற்பட்டு வருவதாக மக்களால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.

முறைப்பாட்டை தொடர்ந்து வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் இன்றைய தினம் (26) குறித்த பகுதிக்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த பகுதியில் மக்களின் விவசாய நடவடிக்கைக்கு என 2013 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காணிகள் வனவள திணைக்களத்தினால் எல்லை இடப்பட்டிருந்த நிலையில், அண்மையில் மக்களின் தேவைக்காக விடுவிக்கப்பட்டிருந்தது.

பொருளாதார நிலை மற்றும் கொரோனா பிரச்சினை காரணமாக மக்கள் காணிகளை துப்பரவு செய்யாத நிலையில், மாந்தை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஒரு வார காலத்திற்கு மேலாக மக்களின் காணிகளை துப்பரவு செய்ததுடன் காணிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் அப்பகுதி மக்களால் கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளருக்கும் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதனிடன் முறையிடப்பட்டது.

அதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டதுடன் மக்களிடம் நேரடியாக பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார். அதே நேரம் குறித்த பிரச்சினை சம்மந்தமாக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயளாலருக்கு தெரியப்படுத்தி விரைவில் மக்களின் காணிகளை விடுவித்து வழங்குவதற்கான செயற்பாட்டை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதியது பழையவை