இலங்கை அரசு ஐ.நா வாக்குறுதியை மீளாய்வு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது: சுமந்திரன்

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் சர்வதேச நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ள நிலையில் அச்செயற்பாட்டினையே முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் மீளாய்வு உட்படுத்துவதற்கான அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அச்சட்டம் பற்றி கருத்து வெளியிடுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்போது இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக நீக்குவதாக இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக 30.1தீர்மானத்திற்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது உருவாக்கப்பட்டது. ஆனாலும் அதிலும் குறைப்பாடுகள் காணப்பட்டதன் காரணமாக அந்த முயற்சி முழுமை அடையவில்லை.

இவ்வாறான நிலையில் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வு செய்யவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. எம்மைப்பொறுத்தவரையில் அரசாங்கம் ஐ.நாவிலும், ஏனைய சர்வதேச அரங்குகளிலும், நாடுகளுக்கும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும்.

அதனை மீளாய்வு செய்வதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

துற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதன் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுக்கப்பட வேண்டும். அதேநேரம், சர்வதேச சம்பிரதாயங்களுக்கு அமைவாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உருக்கப்பட வேண்டும். உருவாக்கப்படும் சட்டங்கள் நிச்சயமாக ஜனநாயக விழுமியங்களை உள்ளீர்த்ததாக இருக்க வேண்டும் என்றார்.
புதியது பழையவை