மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றாத வர்த்தக நிலையங்களை கண்டறிவதற்கான விசேட சோதனை நடவடிக்கைகள் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,மண்முனை வடக்கு பிரதேச செயலகம்,மட்டக்களப்பு மாநகரசபை,மட்டக்களப்பு பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக அதனை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒன்றுகூடுவதையும் சுகாதார வழிமுறைகளையும் இறுக்கமான முறையில் நடைமுறைப்படுத்தும் வகையிலான நடவடிக்கையின் கீழ் இந்த திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன், மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன், மட்டக்களப்பு மாநகரசபையின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாலை ஆறு மணிக்கு முன்பாக சகல வர்த்தக நிலையங்களும் மூடப்படவேண்டும் என்ற மாவட்ட கொவிட் செயலணியின் அறிவுறுத்தல்களை மீறிய வர்த்தக நிலையங்களுக்கு கடுமையான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு மூடப்பட்டதுடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத வகையில் செயற்பட்ட உணவு விடுதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.