சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி சூடு


கிளிநொச்சி - புளியம்பொக்கனை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை இன்று 21-06-2021ஆம் திகதி அதிகாலை படையினர் தடுத்து நிறுத்த முற்பட்ட போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

புளியம்பொக்கணை நாகேந்திரபுரம் பகுதியில் சட்டவிரோத மண் ஏற்றுவது தொடர் பாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் புளியம்பொக்கணை நாகேந்திரபுரம் கண்டாவளை முரசுமோட்டை ஆகிய பகுதிகளில் இராணுவக் காவலரண்கள் அமைக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று (21)அதிகாலை புளியம்போக்கணை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்றை வீதி காவல் கடமையில் நின்ற படையினர் மறித்த போது இராணுவத்தினர் மீது டிப்பர் வாகனம் மோத முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதில் டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 700 மீட்டர் தூரத்துக்கு அப்பால் வாகனத்தை செலுத்தி சென்று டிப்பர் வாகனத்தில் இருந்த மண் இறக்கப்பட்டுள்ளது.
புளியம்பொக்கணை பகுதியில் நாகதம்பிரான் ஆலய சந்தி மற்றும் முசிலம்பிட்டி சந்தி ஆகியவற்றில் இராணுவக் காவலரண்கள் இருக்கின்ற போதும் அவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் டிப்பர் வாகனத்தை தடுத்து நிறுத்த முற்பட்ட சமயமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

புதியது பழையவை