இலங்கையில் கடந்த 18 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான 12,165 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 4,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தொலைப்பேசி அழைப்பிகளினூடாக 48,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சிறுவர் துஷ்பிரயோகம், துன்புறுத்தல் தொடர்பில் மறைக்காமல் உடனடியாக முறைப்பாடுகளை செய்வது அவசியம். கிடைக்கும் முறைப்பாடுகளுக்கு அமைவாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையங்கள் அல்லது 1929 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்கவும்.
இந்நிலையில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் பொறுப்பு ஒட்டுமொத்த சமூகத்தினருக்கும் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிரான போராட்டமும் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்துவதும் ஒருங்கே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
15 வயது சிறுமியை இணையத்தளத்தினூடாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்துரைத்துள்ள அவர், சிறுமியை விற்பனை செய்தமை, துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட அனைவரும் பதவி நிலைகள் பாராமல் தண்டிக்கப்பட வேண்டும்.
சிறுவர் துஷ்பிரயோம் தொடர்பில் பதிவான முதல் சம்பவம் இதுவல்ல. இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறாமல் இருக்கும் வகையிலான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டியது அனைவரினதும் பொறுப்பு.
தண்டனைச் சட்டத்தின் 360ஆவது பிரிவின் கீழ், சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தூண்டும் எவருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் சந்திக்க நேரிடும். எனினும் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்.