மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை நாவலடி பகுதியில் கரையோர பேனல் மற்றும் மூலவள திணைக்கள சட்ட அனுமதி நிபந்தனைகளுக்கு விரோதமான முறையில் லொறி ஒன்றில் குருநாகல் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட சிப்பி ஓடுகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பண்டார தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணைபிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றிக்கு அமைய மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மட்டக்களப்பு வாழைச்சேனை நாவலடி பகுதியில் பயணித்த லொறி ஒன்றினை சோதனையிட்டபோது 50 கிலோ நிறையுடைய 410 பேக் சிப்பி ஓடுகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றும் சிப்பி ஓடுகளை ஏற்றி சென்ற லொறி உட்பட வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்த படவுள்ளதாக குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் யு .பி . ஏ .டி . கே .பி . கருணாரத்ன ஆலோசனையின் கீழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மா சிங்க மற்றும் , மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல் ஆர் .குமாரசிறி ஆகியோரின் வழிகாட்டலில் மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு விசேட புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
