சர்வாதிகார நோக்கங்களுக்காக ஜனநாயக போராளிகளை தண்டிப்பதை உடனடியாக நிறுத்துமாறு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாரத்ன மற்றும் அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் நாமல் கருணாரத்ன உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தின் இந்த சர்வாதிகார, நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடுமையான எதிர்ப்பையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே மக்கள் நலனுக்காக உழைப்பதற்கு பதிலாக, அவர்களின் தனிப்பட்ட அதிகார வெறியுடன் செயற்பட்டு, மக்களின் வாழ்க்கையை துன்புறுத்துவதையே செய்து வருகிறது.
அதேபோல் ஜனநாயகத்தின் போர்க்களத்தில் போராடும் போராளிகளை தண்டிப்பதும் அவர்களின் வேலையாக இருந்து வருகிறது.
நாள்தோறும் மக்களின் ஏமாற்றங்களை மரபுரிமையாகக் கொண்டுள்ள இந்த அரசாங்கத்துக்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஏற்கெனவே அணிதிரண்டு வருகின்றனர். அதைத் தாங்க முடியாத அரசாங்கம் இப்போது அதன் கொள்கையாக அடக்குமுறை, அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வருகிறது.
இந்த நாட்டில் ஜனநாயக அரசியலில் ஈடுபட ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் உரிமை உண்டு, அதை மீறும் எத்தகைய உரிமையும் அரசாங்கத்திற்கு இல்லை.
அரசாங்கத்தின் இயலாமை, தோல்வி மற்றும் உணர்வற்ற தன்மையை மறைக்க ஜனநாயக அரசியல் அரங்கில் உள்ள ஆர்வலர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் குடிமக்களை தண்டிக்க எந்தவகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்பதை நாங்கள் கூறுகின்றோம்.
சர்வாதிகார நோக்கங்களுக்காக ஜனநாயக போராளிகளை தண்டிப்பதை உடனடியாக நிறுத்துங்கள்.
கருத்துச் சுதந்திரம், ஜனநாயகப் போராட்டம், அரசாங்கத்தை விமர்சித்தல் போன்றவற்றுக்கான உரிமைகள் இந்த நாட்டின் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்படுவதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சகோதர அரசியல் கட்சிகளுக்கு உள்ள, அரசியல் ஜனநாயக உரிமைகளை மீறுவதற்கு எதிராக சாத்தியமான மற்றும் செயற்பட முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்
என்பதையும் அரசாங்கத்திற்கு நினைவூட்ட விரும்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.