மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதனப்பசளையினை உற்பத்தி செய்வது குறித்து கலந்துரையாடல்


ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்தல் சேதனை உரத்தினை உற்பத்தி செய்வதற்கான பண்ணையை அமைப்பதற்கான நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களது தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கால்நடைகள் இராஜாங்க அமைச்சர் டி.பீ.ஹேரத் கலந்துகொண்டார்.

இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், அமைச்சின் செயலாளர்கள், கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், மில்கோ நிறுவனத்தின் உயரதிகாரிகள், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்ட செயலகங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட விடயத்துடன் தொடர்புடைய ஏனைய திணைக்களங்களின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் கால்நடை பண்ணைகளை அமைப்பது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.குறிப்பாக மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களில் இதனை அமைப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது மாதிரி பண்ணைகளை அமைத்து அதிலிருந்து பால் உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கச் செய்வது, கால்நடைகளுக்கான உணவினை அதிலேயே உற்பத்திசெய்தல், பண்ணையிலிருந்து சேதனப்பசளைகளை உற்பத்திசெய்து அதனை விவசாயிகளுக்கு விநியோகம் செய்வது குறித்து ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு, களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, கரடியனாறு,கிரான்,மயிலத்தமடு ஆகிய பகுதிகளிலும் அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகர்,உகன,திருக்கோவில்,தெகியத்தன்கண்டி ஆகிய பகுதிகளும் இந்த பண்ணைகளை அமைப்பதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

சுமார் மூன்று இலட்சம் கால்நடைகள் காணப்படும் நிலையில் அவற்றினையும் உச்ச நிலையில் பயன்படுத்துதல் குறித்தும் புதிய கால்நடைகளை பண்ணைகளை அமைத்தல் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

புதியது பழையவை