வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கம்


மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கமாகவே பார்க்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இரா. சாணக்கியன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

கூழாவடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளான பேரிலாவெளி, கக்கிளாசோலை. பெரியவெட்டுவான் ஆகிய பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் ஆராயவே பாராளுமன்ற உறுப்பினர் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.

குறித்த பகுதியில் தினமும் யானைகளினால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டனர்.
கிராமிய வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து தருமாறும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரவு வேளையில் நோய்வாய்ப்படுவோரை நீண்டதூரம் கொண்டுசெல்லவேண்டிய நிலையுள்ளதாகவும் தமது பகுதிக்கான பிரதான வீதியும் பயன்படுத்தமுடியாத நிலையுள்ளதனால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த நான்கு கிராமங்களிலும் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையிலும் இதுவரையில் ஒரு முழுமையான வைத்தியசாலையில்லையெனவும் மக்கள் கவலை தெரிவித்தனர்.
கிராமத்தின் பாடசாலை 05ஆம் ஆண்டு வரை மாத்திரமே உள்ளதுடன் ஐந்தாம் ஆண்டு கல்வியை
பூர்த்திசெய்யும் பிள்ளை நீண்டதூரம் வேறுபாடசாலைக்கு செல்லவேண்டியுள்ளதனால் பல மாணவர்கள் தமது கற்றல் செயல்பாடுகளை இடைநிறுத்தும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் இதன்போது பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டினர்.

மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் தமக்கு பாதுகாப்புக்களை வழங்குவதற்கான யானை வேலி அமைத்துத் தருவதுடன் பாடசாலை, வைத்தியசாலை, மற்றும் வீதி உள்ளிட்ட விடயங்களை அபிவிருத்தி செய்வதற்கு உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் கிராம வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதியது பழையவை