மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பாலை பகுதியில் உள்ள ஆற்று பகுதியில் மண் அகழப்படுவதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள்,பொதுமக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
தும்பாலை ஆற்றுப்பகுதியில் இரவு வேளைகளில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மண் அகழ்வுகள் காரணமாக ஆற்றுப்பகுதி ஆளமாக செல்வதன் காரணமாக எதிர்காலத்தில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலத்தில் தும்பாலை ஆற்றில் மண் அகழ்வதனால் அப்பகுதியில் இரண்டு பாலங்கள் உடைந்து மக்கள் போக்குவரத்து செய்யமுடியாத நிலையேற்பட்டதாகவும் தற்போது புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக புதிய பாலமும் இந்த மண் அகழ்வினால் உடைக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்
இது தொடர்பில் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லையெனவும் இரவு வேளைகளில் 10க்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களில் சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வு முன்னெடுக்கப்படுவதாகவும் இரவு வேளைகளில் வீதிகளில் பெரிய சத்ததுடன் செல்வதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுடன் வாழ்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தினமும் உழவு இயந்திரங்கள் தமது வீதிகளில் செல்வதனால் வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் துவிச்சக்கர வண்டியில் கூட செல்லமுடியாத நிலையுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தும்பாலை பகுதிக்கு மக்களின் கோரிக்கையினையடுத்து விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அப்பகுதியை பார்வையிட்டார்.
இதன்போது மண் அகழப்படும் பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அது தொடர்பில் பார்வையிட்டதுடன் உடைந்துள்ள பாலங்களையும் பார்வையிட்டதுடன் சேதமடைந்துள்ள வீதிகளையும் பார்வையிட்டார்.