தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் அண்மைக் காலமாக சட்டவிரோத கசிப்பு எனப்படும் வடிசாராயம் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அவற்றினை தேடி பொலிஸார் விசேட நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளர்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளத்தை அண்டிய காட்டுப் பகுதியில் மறைமுகமான இடத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன்போது கோடா அடங்கிய ஆறு பரல்கள், 70 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் சில பொருட்களும் வவுணதீவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இதில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் காட்டுக்குள் தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாரசிங்கவின் ஆலோசனையில், வவுணதீவு பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலுக்கமைவாக, நிலையப் பொறுப்பதிகாரி கே.டி. நிசாந்த அப்புகாமியின் விழிகாட்டலில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை கண்டியனாறு குளத்தை அண்டிய பகுதியில் இளைஞர் ஒருவர் உள்ளூர் தயாரிப்பான கட்டுத் துப்பாக்கியுடனும் கசிப்பு 3750 மில்லி லீற்றருடனும் நேற்று மாலை விஷேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரி கே.டி. நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளத்தோரங்களிலுள்ள காட்டுப் பகுதியில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் மிக அதிகரித்துள்ளதாகவும், விஷேட அனுமதியுடன் வவுணதீவ் பொலிஸாரால் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டறிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தெரிவித்தனர்.