நாட்டில் தற்போது வியாபித்துள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தான் உற்பத்தி செய்த மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறும் தனது பங்களிப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு கோரியும் பாரம்பரிய மருத்துவர் ஒருவர், அனுராதபுரம் மைத்திரிபால சேனாநாயக்க பூங்காவுக்கு முன்பாக, இன்று (25) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
அனுராதபுரம் மருத்துவ மையத்தில் பாரம்பரிய மருத்துவராக செயற்பட்டு வரும் ஹேவாகமகே நிஹால் சிசிர குமார (55) என்பவரே உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துரைத்த அவர்,
நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, பாரம்பரிய வைத்தியர் என்ற முறையில் சாதகமான தீர்வொன்றை என்னால் பெற்றுத்தர முடியும்.
இதற்காக நான் 2020 ஆம் ஆண்டுமுதல் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கும் நான் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி எனது கருத்தை தெரிவித்திருந்தேன். இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் ஏற்படவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான சாதகமான தீர்வுகள் எம்மிடம் உள்ளன. போதியளவான மருந்துகள் எம்மிடம் உள்ளன.
ஆரம்பித்திலிருந்தே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
நான் பல அமைச்சர்களிடம் சென்று எங்கள் பங்களிப்பைப் பெற்று இந்த நோயைக் கட்டுப்படுத்த உதவுமாறு கோரினேன். எனினும் அவர்கள் அதற்குப் பொறுப்புடன் பதிலளிக்கவில்லை.
என்னை நோக்கி வரும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறே அவர்கள் எனக்கு அறிவுறுத்தினர். என்னால் அதனை மீற முடியாது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் நாம் வீழ்ச்சியடைந்துள்ளோம். நான் ஒரு பாரம்பரிய வைத்தியர் என்ற முறையில் இதனை ஊடகங்களின் வாயிலாக வெளியில் கொண்டுவருவதற்கு முயற்சித்தேன். நான் சவாலான பொறுப்பை ஏற்பதற்கு தயார் நிலையில் உள்ளேன். இந்த பெருந்தொற்றிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும்.
தொற்றாளர்களை குணப்படுத்த வேண்டியது அவசியம். நாங்கள் பலருக்கு சிகிச்சை அளித்தோம். அவர்கள் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
அதற்குத் தேவையான ஒளடதங்கள் எம்மிடம் உள்ளன. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பு எமக்கும் உள்ளது.