மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த குழுவொன்றை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து பல இலட்சம் பெறுமதியான போதைப்பொருள்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இன்று அதிகாலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினரால் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையின் பிரதிப்பொலிஸ்மா அதிபர் வர்ண ஜயசுந்திரவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட அதிரடிப்படையினர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு பிராந்திய விசேட அதிரடிப்படையினர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரவிட்ட விதானவின் வழிகாட்டலில் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையின் இரண்டாம் கட்டளை அதிகாரி ஐபி யு.கே.வி.தென்னக்கோன் தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டிருந்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி வீடு ஒன்று இன்று காலை முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்து 300கிராம் ஐஸ் போதைப்பொருளும் 15கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டதுடன் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் கார் மற்றும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டதுடன் அங்கிருந்து 250000ரூபா பணமும் மீட்கப்பட்டது.சுமார் 38இலட்சம் ரூபாவுக்கு அதிகமான போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கல்முனையிலும் போதைப்பொருள் விற்பனை நிலையம் கல்முனை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்து 10கிராம ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இந்த முற்றுகையின்போது பெண் ஒருவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் கொழும்பில் உள்ள பிரதான போதைப்பொருள் வியாபாரிகளுடன் ஏற்பட்ட தொடர்புகள் மூலம் போதைப்பொருள் வியாபாரத்தினை முன்னெடுத்துவந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இந்த முற்றுகையில் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாமினை சேர்ந்த சப்இன்ஸ்பெக்டர்களான பண்டார,யு.டி.ஜயவர்த்தன,விசேட அதிரடிப்படையினை சேர்ந்த பிரியங்கர,நிசாந்த, அளவத்துகொட,பத்நாமி, பண்டார,ரத்நாயக்க,பத்தீராத,பக்தெபதான,ஜயசிங்க,உபாலி,மதுங்க ஆகியோர் கொண்ட விசேட அதிரடிப்படையின் குழுவே முற்றுகையினை முன்னெடுத்தது.