கோவிட் அறிகுறியற்ற அல்லது இலேசான அறிகுறிகளை கொண்ட நோயாளிகளை வீடுகளிலேயே வைத்து பராமரிப்பு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை இலங்கையின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வழிகாட்டுதல்களின் படி, வீட்டு அடிப்படையிலான பராமரிப்பு மற்றும் நிறுவன சுகாதாரப் பாதுகாப்பு தேவைப்படுவோரை சோதனை செய்வதற்கு பிரதேசத்தின் சுகாதார மருத்துவ அதிகாரிகள் பொறுப்பாக இருப்பார்கள்.
நோயாளிகள் 02 - 65 அகவைக்குள் இருக்க வேண்டும்.
சுகாதார வசதிகள் மற்றும் போதுமான காற்றோட்டம் ஒதுக்கப்பட்ட ஒரு தனி அறையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
நோயுற்றவர்களுக்கு, உடல் பருமன் (BMI> 30), நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட இதயம்/நுரையீரல்/சிறுநீரக நோய்கள் அல்லது பிற மருத்துவ நிலைமைகள் போன்றவை இருக்கக்கூடாது.
நோயெதிர்ப்பு குறைபாடு நிலையால் அவதிப்படக்கூடாது அல்லது நீண்டகால நோயெதிர்ப்பு தடுப்பு சிகிச்சையில் இருக்கக்கூடாது.
வீட்டில் போதுமான சுய பாதுகாப்பு அல்லது பராமரிப்பாளர் ஆதரவு இருக்க வேண்டும்.
சரியான தொடர்பு வசதிகள் மற்றும் தொடர்பு கொள்ளும் திறன் (நோயாளி அல்லது பராமரிப்பாளர்) இருக்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்ணின் கர்ப்பகாலம் 24 வாரங்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
மேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளி நோயின் 14வது நாளில் வெளியேற்றப்படலாம்.
அறிகுறிகள் தொடர்ந்தால், அறிகுறிகள் தீரும் வரை நோயாளி கண்காணிக்கப்படுவார் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.