கொரோனா மரணங்களை கூட இன ரீதியாக பிரித்துப் பேசிய பௌத்த பிக்கு ஒருவருக்கு நேரலை நிகழ்ச்சியில் பதிலடி கொடுத்த செய்தியாளர்.
தென்னிலங்கையில் அதிகம் பேசப்படுவதுடன் பாராட்டுக்களும் குவிந்து கொண்டிருக்கின்றன.
தென்னிலங்கையில் தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் தொலைபேசி வாயிலாக பௌத்த பிக்கு ஒருவர் கொரோனா மரணங்கள் தொடர்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
குறித்த பௌத்த துறவி, கொவிட் தொற்றினால் சிங்களவர்கள் எத்தனை பேர் உயிரிழக்கின்றார்கள், தமிழர்கள் எத்தனை பேர், முஸ்லிம்கள் எத்தனை பேர் உயிரிழக்கின்றார்கள் என்பதை அரசாங்கம் பிரித்து அறிவிக்க வேண்டும்.
அதேவேளை, உலகில் குறுகியளவு சிங்கள மக்கள் வாழ்கின்றமையினால், சிங்கள மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு சிங்கள மக்கள் அதிகளவில் உயிரிழந்தால் இலங்கையில் சிங்கள இனம் விரைவில் இல்லாதாகி விடும் என்றும் குறித்த பௌத்த துறவி பேசிக் கொண்டிருந்த வேளை, அதற்கு செய்தியாளர் உடனடியாகவே பதிலடி கொடுத்தார்.
இதன்போது பதில் வழங்கிய அந்த செய்தியாளர், உங்களின் கருத்துக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். ஆனால் சில விடயங்களுக்கு நாம் இணக்க முடியாது. நான் தனிப்பட்ட ரீதியில் இணங்க மாட்டேன். மனிதன்… மனிதனே… உடம்பில் ஓடுவது ஒரே இரத்தம். அது சிங்களமா? தமிழா? முஸ்லிமா? கத்தோலிக்கரா? பெளத்தரா? இந்துவா? என்பது தேவையற்றது.
இவ்வாறான கருத்தை சமூகமயப்படுத்த வேண்டாம். இந்த மனித குலம் என்பது ஒரே பிரிவாகும். சிங்களவர்கள் தமது அடையாளத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள். பெளத்தர்கள் தமது அடையாளத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
பல்வேறு கலாசாரத்திற்கு மதிப்பளிப்போம்.. ஒரே நிறத்திலான வண்ணத்துப்பூச்சிகள் உலகில் இருந்தால், வண்ணத்துப்பூச்சியின் உலகம் அழகாக இருக்காது. ஒரே நிறத்திலான மலர்கள் பூத்தால், அந்த உலகம் அழகாக இருக்காது என்றும் அவர் பதிலடி கொடுத்தார்.
பௌத்த துறவிக்கு ஊடகவியலாளர் கொடுத்த பதிலடியால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.