திருகோணமலையில் இழுவைப்படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பத்தையடுத்து கிண்ணியாவில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த பகுதியில் அமைதி நிலையை பேணும் வகையில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் இழுவைப்படகு உடைந்து கவிழ்ந்ததில் இதுவரை 7 மரணங்கள் உறுதியாகியுள்ளன.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சடலமாக மீட்கப்பட்டவர்களில் பலர் பாடசாலை மாணவர்கள் என தெரியவரும் அதேவேளை தொடர்ந்தும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிஞ்சாக்கேணி பகுதியில் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிந்த நிலையிலேயே குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.
இதில் பயணம் செய்த மாணவர்களில் ஏழு பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருவதுடன், காணாமல் போன மாணவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிண்ணியா - குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் எனப் பலர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து சம்பவித்திருக்கிறது.
காப்பற்றப்பட்டவர்கள் நோயாளர்காவு வண்டி மூலமாக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுவதுடன் இவ்விபத்தில் பலர் மரணித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகிறது.
எனினும், சரியான மரண விபரம் இன்னும் தெரியவராத நிலையில் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


