மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பிரதேசமான வாகரை ஓமடியாமடுவில் பன்சாலை ஒன்றில் இடம்பெற்ற யானைவெடி வெடிப்பு சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமுற்ற தேரர் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
நாகஸ்த்தன வெலிக்கந்தவைச் சேர்ந்த சிசிரகுமார வயது (27) என்ற இளைஞ்ஞனே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது வியாழக்கிழமை இரவு ஓமடியாமடு சுதுகல ஆரன்னிய பன்சாலையின் முதியலங்கார சுபாத்தாலங்கார தேரருடன் சேர்ந்து 8 பேர்கள் தங்கியுள்ளனர்.இதன்போது வெடிச்சத்தம் கேட்டதாகவும் பின்னர் பலர் சத்தமிடும் சத்தம் கேட்டதாகவும் சம்பவம் என்னவென்று அறிய அருகில் வயல் செய்கையில் இரவு நேர காவலில் ஈடுபட்டவர்கள் சிலர் சென்று பார்த்தபோது இளைஞன் ஒருவர் வயிற்றுப் பகுதியில் காயத்துடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
இதன்போது அங்கிருந்த தேரருக்கு கைகள் இரண்டிலும் மற்றும் கால் பகுதியில் காயமேற்பட்டு காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.பின்னர் வாழைச்சேனை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
தேரர் உட்பட அங்கு தங்கியிருந்த ஏனைய 6 பேர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். தேரருக்கும் உயிரிழந்த நபருக்குமிடையில் இடம்பெற்ற கருத்து மோதல் காரணமாக கோமடைந்த தேரர் யானை வெடியினை எடுத்து கொழுத்தி சிசிரகுமராவின் வயிற்றுப் பகுதியில் வெடிக்க வைத்துவிட்டு காட்டுப் பகுதியில் தப்பி ஓடி ஒழிந்து கொண்டதாகவும் விசாரணைகளின் போது தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தேரர் கடந்த காலத்தில் இராணுவத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.குறித்த தேரரின் நடவடிக்கைகள் பௌத்த மத பண்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக காணப்பட்டதாகவும் மது போதையின் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் கருத்து தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி இ.சிகாப்தின் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தினை உடற் கூற்றாய்விற்காக சட்ட வைத்தியரின் அறிக்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லுமாறு பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.