இலங்கைக்குத் தென்கிழக்காக காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டை விட்டு விலகி கிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காங்கேசந்துறையில் இருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காங்கேசந்துறையில் இருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.