5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி!

5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசியை அங்கீகரிப்பது தொடர்பில் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர பயன்பாட்டுக்காக 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்குமாறு கோரி பைஸர் நிறுவனம் நேற்று விண்ணப்பித்திருந்தது.

இதற்கமைய சாதாரணமாக வழங்கப்படும் தடுப்பூசி அளவில் பத்தில் ஒரு பங்கை ஆறு மாத குழந்தைகளுக்கு வழங்க முடியும் என பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான குறித்த கொரோனா தடுப்பூசி 2 முதல் 4 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே பரிசோதிக்கப்படவில்லை எனவும், விஞ்ஞான ரீதியான தரவுகளையே பைஸர் நிறுவனம் சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசிக்கான தரவுகளை சமர்ப்பிக்குமாறு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தினால் பைஸர் மற்றும்BioNTech நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த கொரோனா தடுப்பூசி குறித்து இந்த மாத இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் எனவும், மார்ச் மாதமளவில் அமெரிக்க சிறுவர்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இதுவரை சர்வதேசரீதியில் எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை