2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடாத்துவதற்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், சமய நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
பரீட்சை சட்டத்தின் அடிப்படையில் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதனடிப்படையில், கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு 29 வைத்தியசாலைகளில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மாணவர்கள் குறித்த வைத்தியசாலைகளில் அமைக்கப்படும் நிலையத்தின் ஊடாக பரீட்சைக்குத் தோற்ற முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, வைத்தியர் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்படுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை தொடர்பில் ஏதேனும் கேள்விகள் இருப்பின் 1911 எனும் துரித இலக்கத்திடன் தொடர்புகொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 0112 784 208 அல்லது 0112 784 537 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.