17 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கையில்

நாடளாவிய ரீதியில், நாட்டிலுள்ள 17 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் (02) நாளையும் (03) மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

சுகாதார அமைச்சருடன் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தமக்கு திருப்தியளிக்காத காரணத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று (02) முற்பகல் 8.00 மணியளவில் வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சுகாதார தொழில்துறைநிபுணர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சம்பளப் பிரச்சினை, இடர்கால கொடுப்பனவு, உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் மற்றும் உதவி வைத்திய சேவைகளில் ஈடுபடும் 18 சுகாதார தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் (MLT, Radiographer, etc) கடந்த பெப்ரவரி 07ஆம் திகதி முதல் பணிப் புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தமது போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்து தங்களது சங்கங்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் எட்டப்பட்ட  தீர்மானத்திற்கு அமைய, பெப்ரவரி 16ஆம் திகதி முதல் இரு வாரங்களுக்கு போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக, பெப்ரவரி 15ஆம் திகதி சுகாதார தொழில்துறை நிபுணர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய குறித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் அவர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, தங்களது வேலை நிறுத்த போராட்ட காலத்தில் அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகளில் மாத்திரமே சேவையில் ஈடுபடவுள்ளதாக, அச்சம்மேளனம் தெரிவித்துள்ளது.

குறித்த போராட்டத்தில் இணைந்திருந்த அரசாங்க தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவரான சமன் ரத்னப்பிரியவிற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடையுத்தரவு எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை