மிகைவரிச் சட்டமூலத்தில் EPF, ETF உள்ளடக்கப்பட மாட்டாது என சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறிவிப்பு

உத்தேச மிகைவரிச் சட்டமூலத்தின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உட்பட 13 அரச நிதியங்கள் உள்ளடக்கப்படாத வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென சட்டமா அதிபரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் நிதிச் செயலாளர் சட்டமா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச மிகைவரிச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கடந்த பெப்ரவரி மாதம் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட மிகை வரி சட்டமூலத்தின் சில விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனக்குறிப்பிட்டு அவற்றை நிறுவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துமாறும் கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால்  குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி, மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை