மட்டக்களப்பில்-நீண்ட நேரம் காத்திருந்து சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் பெறும் மக்கள்

நாடு பூராகவும் பல பகுதிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகிக்கப்படுகின்றமையால் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று அதனைப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு
நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்களுக்குச் சீராக வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு லிட்ரோ எரிவாயு விநியோக நடவடிக்கை வாழைச்சேனை பொலிஸ் நிலையம் முன்பாக ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவரின் முயற்சியினால் இடம்பெற்றது.

லிட்ரோ எரிவாயு விநியோக மொத்த விற்பனை முகவர்களால் எடுத்து வரப்பட்டு சுமார் 180க்கும் அதிகமான சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் வாழைச்சேனை, பேத்தாழை, கல்குடா, ஓட்டமாவடி, மீராவோடை, கறுவாக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையில் வழங்கப்பட்டது.

குறித்த மொத்த விற்பனை நிலையத்தில் எரிவாயு கொள்வனவு செய்ய வருகை தந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு எரிவாயு விநியோகம் இடம்பெற்றது.

கடந்த சில நாட்களுக்கும் மேலாக நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த எரிவாயு சிலிண்டர்கள் தற்போது நாட்டிலுள்ள களஞ்சியசாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்ற நிலையில், எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாகத் தகவல் பரவியதையடுத்து பொது மக்கள் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையிலிருந்தே குறித்த இடத்தில் காத்திருக்கும் நிலைமை காணப்படுகின்றது.

இந்த எரிவாயுக் கொள்வனவில் சிறுவர்கள், பெண்கள் அதிகளவாக வருகை தந்து பெற்றுச் சென்றதைக்காண முடிந்தது.

மேலும் எரிவாயுவைக் கொள்வனவு செய்யக் காத்திருந்த சிலருக்கு அது கிடைக்காத நிலைமையும் காணப்பட்டுள்ளது.

புதியது பழையவை