க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு…!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையினை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், பரீட்சையினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் போது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் இதன்போது கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், பரீட்சை கடமைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தடையின்றி எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும்  பணியாளர்கள் தமது பரீட்சை கடமைக் கடிதம் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் விரைவில் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தாமதமாக வரும் எந்தவொரு மாணவருக்கும் சலுகை காலம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன மேலும் தெரிவித்துள்ளார். 
புதியது பழையவை