மட்டக்களப்பில் தியாகி பொன்.சிவகுமாரனின் 48ஆவது ஆண்டு நினைவு தினம்

தமிழர் விடுதலைப்போராட்டத்தில் முதல் தற்கொலை போராளியாக அடையாளப்படுத்தப்பட்ட தியாகி பொன்.சிவகுமாரனின் 48வது ஆண்டு நினைவு தினம இன்று மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொன்.சிவகுமாரனின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தலைவர் இ.சத்தியசீலன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது பொன்.சிவகுமாரனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதேவேளை நினைவு தினம் நிறைவுபெற்ற வேளையில் அங்கு வந்த வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த நிகழ்வுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் நிகழ்வில் நின்றவர்களையும் கையடக்க தொலைபேசியில் வீடியோ பதிவு செய்தனர்.

இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் இ.சத்தியசீலன் ஆகியோர் பொலிஸாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

விடுதலைப்புலிகள் உறுப்பினர் நினைவுகூரப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக இதன்போது பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த நபர் எந்த விடுதலை இயக்கத்தினை சேர்ந்தவரும் இல்லையெனவும் அவர் மாணவர் ஒன்றிய தலைவராக செயற்பட்டு தமிழர்களின் உரிமைக்காக போராடியவர் எனவும் இதன்போது பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.

எனினும் யாழில் உயிரிழந்த ஒருவரை இங்கு ஏன் அனுஸ்டிக்கின்றீர்கள் என்ற கேள்விகளை கேட்டு விசாரணைகளை முன்னெடுத்ததுடன் ஊடகவியலாளர்களிடமும் நீங்கள் யார் அழைத்துவந்தீர்கள் என்ற கேள்வியும் பொலிஸாரினால் கேட்கப்பட்டது.

தாம் தனியொரு கட்சியெனவும் உயிரிழந்த ஒருவரை நினைவுகூரும் உரிமையுள்ளது எனவும் அதனை யாரும் தடுக்கமுடியாது எனவும் இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்ததுடன் பொலிஸார் அங்கிருந்துசென்றனர்.

புதியது பழையவை