கிழக்கிலே தொடர்ச்சியாகத் தமிழர்களின் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதும், அதன் அதிகார நிர்வாக நடைமுறையை முடக்குவதுமான நடவடிக்கைகளை முஸ்லிம் அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்களும் முன்னெடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் இணையத்தில் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் நீக்கப்பட்டு அம்பறை மாவட்டத்தில் 19 பிரதேச செயலகங்கள் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் கண்டனம் தெரிவிக்கையிலே ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சரவைத் தீர்மானத்தைக் கொண்டு சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்குகின்ற கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கதைகேட்டு நீதிக்கு முறனான நடைமுறையைக் கையாள்வது கசப்பான விடயமாகும்.
அம்பாறை மாவட்டத்திலே தொடர்ச்சியாகத் தமிழர்களின் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதும், அதன் அதிகார நிருவாக நடைமுறையை முடக்குவதுமான நடவடிக்கைகளை முஸ்லிம் அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்களும், சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் முன்னெடுத்து வருகின்றார்கள். இதனூடாக இன்று அம்பாறை மாவவட்டத்திலே பல தமிழ் கிராமங்கள் அழிவுற்றுள்ளது.
திராய்க்கேணி, அட்டப்பளம், நிந்தவூர், ஆளங்குளம், மீனோடைக்கட்டு, பொத்துவில்லில் பல பகுதிகள் உட்பட பல பிரதேசங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
மேலும் பழம்பெரும் கிராமங்கள் பலவற்றின் பெயர்கள் நீக்குகின்ற செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. தற்போது கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை மையமாக வைத்துப் பல நகர்வுகளை முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த விடயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்முனை வடக்குப் பிரதேசத்தின் காணிப்பதிவு அலுவலகம் நீக்கப்பட்டது. இது தொடர்பில் ஜனாதிபதி கவனத்திற்கு நாங்கள் இதனைக் கொண்டு சென்றோம். அவர் பிரதமராக இருக்கும் போது நாங்கள் நேரடியாகச் சந்தித்து இவ்விடயத்தைக் கூறியபோது தாம் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டு 33 வருடங்களாக இயங்கி வந்த கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினை முடக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக காணிப் பதிவு அலுவலகம் மாற்றப்பட்டது அதன் அடுத்தபடியாக தற்போது உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்தில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கப் பிரதேச செயலகத்துடன் 20 பிரதேச செயலகங்களாகக் காட்டப்பட்ட விடயம் தற்போது கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் நீக்கப்பட்டு 19 பிரதேச செயலகங்களாகக் காட்டப்பட்டுள்ளது.
தமிழ், முஸ்லிம் உறவு பாதுகாக்கப்பட வேண்டும் அல்லது ஒற்றுமைப்பட வேண்டும் என்று தமிழ் தரப்பால் மாத்திரம் கூறப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் கிழக்கிலே தமிழர்களைத் இல்லாமல் செய்வதற்கான வார்த்தைகளாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் அடிப்படைவாதிகள், அரசியல்வாதிகள் எந்தவொரு நல்ல நோக்கத்தையும் தமிழர்கள் மீது இதுவரை காட்டவில்லை. கடந்த 1990 ஆண்டு அரசாங்க படைகளுடன் சேர்ந்து எமது மக்களை அழித்த வரலாறுகள் உண்டு.
இவ்வாறான கடந்த காலங்களையெல்லாம் மறந்து எதிர்காலத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் தமிழர்கள் இருந்தாலும், சில முஸ்லிம் அரசில்வாதிகளிடம் அவ்வாறான சிந்தனைகள் இல்லை. மத ரீதியாகவும், இன ரீதியாகவும் கையாளுகின்ற தன்மையே அவர்களிடம் இருக்கின்றது. அதன் ஒரு அங்க காணப்படுகின்றது கல்முனையில் நடக்கின்ற சில விடயங்கள்.
இந்த விடயத்தில், அரசாங்கம் மௌனம் காப்பதும், முஸ்லிம் அரசியல்வாதிகளின் கதைகேட்டு நீதிக்கு முரணான நடைமுறையைக் கையாள்வதும் ஒரு வேடிக்கையானதும், கசப்பானதுமான விடயமாகும்.
பொது நிருவாகத்திற்குப் பொறுப்பாகப் பிரதமர் இருக்கின்ற போதும், காணிப்பதிவகம் பிரதமர் வசமிருந்தும் இவ்வாறான செயற்பாடுகள் நீதிக்கு முறனாக இடம்பெறுவது வேடிக்கையானது.
இவ்விடயம் தொடர்பில் எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். எதிர்வரும் 29ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
இதன்போது உரிய அமைச்சர், திணைக்களம் என்பவற்றுடன் கலந்துரையாடி இதற்குரிய விரைவு நடவடிக்கைளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
