ரணிலின் அரசில் தமிழருக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது - ஜெனிவாவில் மட்டக்களப்பு மாநகர முதல்வர்

மொட்டு கட்சியின் பின்னால் இருக்கும் ரணிலின் அரசாங்கம், தமிழ் மக்களுக்காக நியாயமான நீதியான நிரந்தரமான தீர்வை தரும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என ஐ.நா கூட்டத்தொடர் நடபெறும் மண்டபத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வருமாகிய தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த காலங்களில் தமிழர்களின் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான இன அழிப்பு செயற்பாடுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இது விடயத்தில் காலம் தாழ்த்தாமல் குறுகிய கால இடைவெளிக்குள் இதற்கு தீர்வு தரவேண்டும்.

திட்டமிட்ட இனப்படுகொலைக்கு நியாயமான தீர்வு வேண்டும். இதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள அனைத்து நாடுகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழர்களின் இனப்பரம்பலைக் கூறு போட்டு மாற்றி அமைக்க, மாறி மாறி வந்த அரசாங்கங்கள் பிரதேச ரீதியாக அழிவு நடத்தி மாற்றுவதற்காகவே சிங்களக் குடியேற்றத் திட்டங்களை உருவாக்கினார்கள்.

உலகில் தமிழர் தேசத்தை நியாயமான தேசமாக மிளிரச் செய்ய வேண்டும். நீதிக்கான வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாம் ஒன்றுபடுவோம் என்றார்.


புதியது பழையவை