இலங்கையில் கஸ்டப்படுகின்ற விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம் தொடர்பில், வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழிவு தரப்பட்டுள்ளபோதும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இன்று(01-09-2022) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது, உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவாமல், உயர்தர வர்க்கத்தினரையும், மத்திய வர்க்கத்தினரையும் அமைதிப்படுத்த முயல்கிறது.
இதற்காகவே பெற்றோல் விநியோகத்தை அது ஊக்கப்படுத்தி வருகிறது. மறுபுறத்தில் போராட்டங்கள் இடம்பெறும்போது அதனை பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு அடக்கமுயல்கிறது என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.
500 பேர் போராட்டம் நடத்தினால், அதனை அடக்குவதற்கு ஆயிரம் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்தநிலையில் சாதாரணமாக ரணில் விக்கிரமசிங்க, அறிவித்தல்களில் ஆங்கிலத்தில் கையொப்பம் இடுகின்றபோதும், போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைப்பதற்கான ஆவணத்தில் அவர் சிங்களத்தில் கையொப்பமிட்டுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இன்று விடுத்துள்ள அறிவிப்பின் கீழ் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் முன்னதாக ஜப்பான், இலங்கை தொடர்பில் கடன் வழங்குனர் மாநாட்டை நடத்த ஆர்வத்தை வெளியிட்டபோதும் தற்போது அதற்கு உடன்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
இதனை தவிர வெட் வரி போன்ற மறைமுக வரிகளை விதிப்பதன் மூலம் பொருளாதாரம் மீண்டும் மீண்டும் நெருக்கடிகளுகே செல்லும். எனவே மனித உரிமைகளுக்கு இடம்தருவதன் மூலம் சர்வதேச சமூத்திடம் இருந்து உதவிகளை பெறுவதன் நாட்டை முன்னேற்ற முடியும் என்றும் எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.