வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஏர் பூட்டு விழா இன்று 13/09/2022 (செவ்வாய்க்கிழமை) தான்தோன்றீஸ்வரர் ஆலய புனித பூமியில் பாரம்பரிய முறையைத் தழுவியதாக நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் மற்றும் உதவி குருக்கள்ளான வா.சோதிலிங்ககுருக்கள் ஆகியோரினால் பூமி பூசை, கோ பூசை என்பன செய்யப்பட்டு ஆலய வண்ணக்கர் தலைவர் இ.மேகராஜா வண்ணக்கர் செயலாளர் சி,கங்காதரன் , வண்ணக்கர் பொருளாளர் ச.கோகுலகிரிஷ்ணன் ஆகியோர் ஏர்பிடித்து வயலை உழுது ஆரம்பித்து வைத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பெருநில பிரதேச மக்கள் தமது ஜீவனோபாய தொழிலாக விவசாயத்தினையே செய்து வருகின்றமையுடன், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் பின்பு அனைவரும் வயலினை உழுது நாற்றினை விதைத்து தமது தொழிலினை செய்கின்றமையும் பாரம்பரிய முறையாக இருந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பாரம்பரிய முறைகளை தொடர்ந்தும் பேணும் பொருட்டு தேரோட்டத்தினை தொடர்ந்து ஏர்பூட்டு விழாவும் இடம்பெற்றது.