திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்பின் வழிகாட்டலில் பொத்துவில் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் தீர்வுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதலாவது மற்றும் இரண்டாவது குடிநீர் விநியோகத் தொகுதிகளை மக்களுக்கு கையளித்து வைத்தார்.
பொத்துவில் பிரதேச செங்காமம் மற்றும் ஹிதாயாபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட தலா 50 ஆயிரம் லீற்றர் கொண்ட இந்த இரு குடிநீர் விநியோகத் தொகுதிகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு (24) இடம்பெற்றது.
பொத்துவில் பிரதேசத்தில் பல தசாப்த காலமாக குடிநீர்த் தட்டுப்பாடு நிலவும் பிரதேசங்களான செங்காமம் மற்றும் ஹிதாயாபுரம் மக்களின் குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு அங்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, அதனூடாக பெறப்படும் நீர்கள், நீர்த்தாங்கிகளில் சேமிக்கப்பட்டு குடிநீரை நிலக்கீழ் குழாய்வழியாக மக்களின் வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்லும் இத்தொகுதிகள் மூலம் நாளொன்றுக்கு 500 குடும்பங்களுக்குத் தேவையான சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் .முஷாரப்பின் வழிகாட்டலின் கீழ், குவைத் நாட்டின் அல்-நஜாத் தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியில், அந்நூர் நலன்புரிச் சங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம் கடந்த 2021-06-16 ஆம் திகதி பல சாவால்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தியடைந்து குவைத் அல் நஜாத் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் சமீஹ் ஷாகிர் அப்துல் அஸீஸ், செயற்றிட்ட முகாமையாளரான பொறியியலாளர் பஹத் இஹாப் முஹம்மத் அல்-தப்பூஸ், அந்தூர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எஸ்.எம் அலியார், பணிப்பாளர் டாக்டர் ரிப்கி ரம்சான், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எச் அப்துர் ரஹீம், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் வை.எல்.நியாஸ், பிரதேச சபையின் உறுப்பினர்கள், திட்ட அமுலாக்கல் குழு அங்கத்தவர்கள், பொதுமக்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.