மட்டக்களப்பு மாநகர சபையின் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கூட்டம் நேற்றைய தினம் (20) மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ முதல்வர் திரு.தி.சரவணபவன் அவர்களின் தலைமையில் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கழிவகற்றல் செயற்பாடுகளில் தடங்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான உரிய தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இக் கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ பிரதி முதல்வர் திரு.க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் திரு. நா. மதிவண்ணன், மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி. சுஜாதா குலேந்திரகுமார், பிரதி ஆணையாளர் திரு.உ.சிவராஜா, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக பிரதிநிதி வைத்திய கலாநிதி தர்சினி, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி. உதயகுமார், மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ்.அமிர்தலிங்கம், மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.சுதர்சன் உட்பட மத்திய சுற்றாடல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம் உட்பட பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கடந்த சில தினங்களாக உக்காத கழிவுகள் மாநகரசபையினால் அகற்றப்படுகின்றபோதிலும் உக்ககூடிய கழிவுகள் அகற்றமுடியாத சூழ்நிலையேற்பட்டதனால் மாநகரில் பல்வேறு சிக்கல் நிலைகள் தோன்றியுள்ள நிலையில் இந்த கூட்டம் நடாத்தப்பட்டது.
இதன்போது மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் முறையான கழிவகற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் சேகரிக்கும் கழிவுகளை மக்களுக்கு பாதிப்பற்ற வகையில் சேமித்துவைப்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக திருப்பெருந்துறையில் உள்ள கழிவு முகாமைத்துவம் செய்யும் நிலையில் நீதிமன்ற ரீதியான செயற்பாடுகள் மற்றும் அங்கு ஏற்பட்ட தீபரவல் காரணமாக அங்கு தொடர்ந்து கழிவு முகாமைத்துவ செயற்பாடுகள் முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து இங்கு ஆராயப்பட்டது.






