என்னுடைய செயற்பாடுகளும் வேகமும் என்றும் குறையாது அது எங்களது கட்சிக்கும் தேசியத்திற்குமான பயணத்தில் தொடரும். தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் தான் என் தொடர்பான பொய்யான செய்திகளைப் பரப்பி அரசியல் இன்பம் கண்டுகொண்டிருக்கின்றார்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கி.சேயோன் தெரிவித்தார்.
கட்சி உறுப்பினர்களுடன் முரண்பாடு, கட்சியை விட்டு வெளியேறல் என்றவாறாக அண்மையில் வெளியாகிய செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில நாட்களாக என் தொடர்பிலான பொய்யான சில செய்திகள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வளைதளங்களிலும் என் தொடர்பில் செய்திகள் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பானக நான் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறியதாகவும், கட்சியின் சில நபர்களுடன் நான் முரண்பட்டதாகவும் அச்செய்தி பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை நான் முற்றாக மறுக்கின்றேன்.
நாங்கள் ஒரு பாரம்பரியக் கட்சியில் அங்கத்துவம் வகிக்கின்றோம். கட்சி என்ற ரீதியில் பல கருத்து முரண்பாடுகள் வருவது இயல்பான விடயம். கட்சியின் தலைமையோடு கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் பல விடயங்களைப் பேசியிருக்கின்றேன். அது தொடர்பில் நான் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த விடயங்கள் நிறைவேற்றப்படாவிட்டால் நான் வாலிபர் முன்னணித் தலைவர் பதவியைத் துறப்பதற்கும் தயாராக இருக்கின்றேன் என்றுதான் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தேன்.
ஆனால் அதை வைத்து நான் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டேன், கட்சியின் சில நபர்களோடு முரண்பட்டு அதன் காரணமாக வெளியேறிவிட்டேன் என்றவாறான செய்திகள் எல்லாம் வந்துள்ளன.
தமிழ் மக்களின் விடுதலை சார்ந்து தமிழ்த் தேசியத்தின் விடிவு சார்ந்து பயணிக்கின்ற இந்தக் கட்சியில் இருந்து வெளியேறுவேன் என்று நான் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. கட்சியின் உறுப்புரிமையில் என்றும் இருப்பேன். ஏனெனில் இந்தக் கட்சியில் நாங்கள் அடிமட்டத் தொண்டன் என்பதையும் தாண்டி இளவயதில் துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதில் இருந்து படிப்படியாக முன்னேறி இன்று வாலிபர் முன்னணித் தலைவர் என்ற பதவிக்கு வந்திருக்கின்றேன். நான் நேற்று ஒரு கட்சி இன்று ஒரு கட்சியுமாக இருந்து இக்கட்சிக்கு வரவில்லை.
அடுத்து மட்டக்களப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நண்பர் சாணக்கியன் அவர்களுடன் முரண்பட்டு நான் கட்சியில் இருந்து வெளியேறியதாக பொய்யான செய்திகளைக் குறிப்பிட்டு அரசியல் இன்பம் கண்டுகொண்டிருக்கின்றார்கள். இவ்வாறானவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் தான் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். எனக்கும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் எதுவிதமான முரண்பாடும் இல்லை. சுமூகமான ஒரு உறவு இருக்;கின்றது. அவர் அவருடைய கடமைகளைச் செய்து கொண்டிருக்கின்றார். எனவே இவ்வாறான பொய்யான செய்திகளை தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள்தான் பரப்பி அரசியல் இன்பம் காண்கின்றார்கள்.
என்னுடைய செயற்பாடுகளும் வேகமும் என்றும் குறையாது அது எங்களது கட்சிக்கும் தேசியத்திற்குமான பயணத்தில் தொடரும். கட்சி சார்ந்த கட்சியின் முன்னேற்றம் சார்ந்த விடயங்கள், வாலிபர் முன்னணி மற்றும் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான விடயங்கள் குறித்தே எனது கடிதம் அமைந்திருக்கின்றது. அது தொடர்பில் தற்போது வெளிப்படையாகச் சொல்ல முடியாது. காலம் வரும்போது அது தொடர்பில் தெரியப்படுத்துவேன்.
என்றும் என்னுடைய பயணம் இந்த வீட்டில் தான் இருக்கும். இது தமிழர்களுக்கான வீடு. இந்தச் வீட்டுச்சின்னம் நிச்சயமாக இந்தத் தேர்தலில் வெற்றிபெறும். இதனை வெற்றிபெறச் செய்வதற்கு நாங்கள் முழுமூச்சாக இருந்து செயற்படுவோம் என்று தெரிவித்தார்.