இலங்கையில் இன்று (15) முதல் 66% மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெரும்பான்மையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தலைவர்.ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இலங்கை மின்சார சபைக்கு 287 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையில், 66% மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கான பிரேரணை ஜனவரி 02 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பலர் இராஜினாமா
எனினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டதுடன், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் அதன் உறுப்பினர்கள் பலர் இராஜினாமா செய்தனர்.
இதனையடுத்து மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க நேற்று கலந்துரையாடியிருந்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளின்படி 142 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டுவதற்காக 36% குறைந்த மின் கட்டண உயர்வை தயாரித்து நேற்று ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு தலைவர் சமர்ப்பித்துள்ளார்.
தலைவர் மாத்திரம் இதனை அங்கீகரித்த போதிலும் ஏனைய மூன்று உறுப்பினர்களான சட்டத்தரணி சத்துரிக்கா விஜேசிங்க, டக்ளஸ் நாணயக்கார மற்றும் எஸ். ஜி. சேனாரத்ன எதிர்ப்பு தெரிவித்ததால் நிராகரிக்கப்பட்டது. அதனையடுத்து இலங்கை மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை 66% ஆல் அதிகரிப்பது தொடர்பான பிரேரணையை ஏனைய மூன்று உறுப்பினர்களும் சமர்ப்பித்து அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினர்.
ஜானக ரத்நாயக்க அறிக்கை
இது தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டண அதிகரிப்பு பிரேரணையின் ஊடாக, உள்நாட்டுத் துறையில் 90 அலகுகளுக்குக் குறைவாகப் பாவனை செய்யும் குழுக்கள் 250 வீத கட்டண அதிகரிப்பைக் காணவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திருத்தத்தின்படி, உள்நாட்டு பிரிவின் கீழ் அசல் 30 அலகுகளுடன் ஒப்பிடுகையில், தற்போது ஒரு அலகு 8 ரூபாய் கட்டணம் 30 ரூபாயாக அதிகரிக்கப்படும். 31 முதல் 60 அலகுகளுக்கு ரூ.10 முதல் ரூ.37 ஆகவும், 61 முதல் 90 அலகுகளுக்கு ரூ.16 முதல் ரூ.42 ஆகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
91 முதல் 120 அலகு வரையிலான பிரிவினருக்கு ரூ.50 மற்றும் 121 முதல் 180 அலகு வரையிலான பிரிவினருக்கு தற்போதைய கட்டணமான ரூ.50, 181 அலகுக்கு மேல் உள்ள ஒவ்வொரு அலகுக்கும் ரூ.75 என்ற தற்போதைய கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும், நிலையான கட்டணங்களும் அதிகரிக்கும், அதன்படி முதல் 30 அலகுகளுக்கான நிலையான கட்டணம் ரூ.400 வரையிலும், 31 – 60 வரையிலான அலகுகளுக்கு ரூ.550, 61 – 90 வரையிலான அலகுகளுக்கு ரூ.650 வரைக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 91 முதல் 120 அலகு வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 1,500 ரூபாயாகவும், 121 முதல் 180 அலகு வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
மத வழிபாட்டுத் தலங்கள், தொண்டு நிறுவனங்கள், தொழில் துறைகள், பொதுப்பணித்துறை, ஹோட்டல்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு மின்கட்டணம் மற்றும் நிலையான கட்டணங்களை உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. தொழில் துறைக்கு, முதல் 300 அலகு பிரிவின் கீழ் அலகு ஒன்றுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.26 ஆக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
அதேசமயம் , இந்த புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு உட்பட பல தரப்பினர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.