முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் உட்பட இருவருக்கு மரண தண்டனை!ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியின் (ஈரோஸ்) செயலாளர் நாயகம் பிரபாகரனின் 3 வயது பிள்ளை மற்றும் கட்சி உறுப்பினர் ஆகிய இருவரை கொலைசெய்த குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பானது நேற்று (29) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ்வினால் வழங்கப்பட்டது.

1997 ம் ஆண்டு 4 பேரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவருக்கே குறித்த தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த 1997 ஆம் ஆண்டு மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்திருந்த (ஈரோஸ்) கட்சி காரியாலயத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் கட்சி ஆதரவாளர் ஆகிய இருவரும் கட்சி செயலாளருக்கும் இடையே பிணக்கு ஏற்ப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த (1997-7-17) ம் திகதி பாதுகாப்பு உத்தியோகத்தரும் கட்சி ஆதரவாளரும் இணைந்து காரியாலயத்தில் தங்கியிருந்த கட்சி செயலாளர் மீதும் அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மீதும் குண்டு தாக்குதல் மற்றும் வாளால் வெட்டியும் தாக்குதலை நடாத்தினர்.


இதில் கட்சி செயலாளரின் 3 வயது பிள்ளையான கிறேமன் கிஷான் மற்றும் கட்சி உறுப்பினரான சந்திரகுமார் ஆகிய இருவரும் உயிரிழந்ததுடன் பிரபாகரன் அவரது மனைவி மற்றும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் யோகநாதன் ஒரு கையும் புவிராஜசிங்கம் இரு கைகளையும் இழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலை மேற்கொண்ட முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் சமீல ரஜீந்தர, கட்சி ஆதரவாளரான விவேகமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ள நிலையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தொடர்ந்து கடந்த 25 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்று மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது அரச சார்பில் அரச சட்டத்தரணி கலாநிதி ஷஹான் முஸ்தபாவும், எதிராளிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணியின் ஆலோசனைக்கிணங்க சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதாடினர்.

இதனை அடுத்து நீதிபதி குறித்த இருவருக்கும் மனித படுகொலை மற்றும் காயத்தை ஏற்படுத்தியமை போன்ற 6 குற்றச்சாட்டுக்களில் தலா ஒருவருக்கு, 3 இருந்து 5 வரையான குற்றச்சாட்டிற்கு 5 ஆயிரம் ரூபா அபராதமும் 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி வைத்தார்.


மேலும் ஆறாவது குற்றச்சாட்டிற்கு தலா 5 ஆயிரம் ரூபா அபராதமும் 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும், முதலாவது இரண்டாவது குற்றச்சாட்டுக்களுக்கு மரணதண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
புதியது பழையவை