இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதற்கு கட்சியின் மத்திய குழுவில் இணக்கம் தெரிவித்திருப்பதாக தமிழரசு கட்சி தெரிவித்திருக்கின்றது.
தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் ஒற்றுமைபற்றி பேசுவதென்பது நகைச்சுவைக்குரிய ஒன்று.
இந்த நகைச்சுவையை அவ்வப்போது தமிழரசு கட்சியின் தலைவராக அறியப்படும் மாவை சேனாதிராசாதான் நினைவுபடுத்துவதுண்டு.
இப்போதும், தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் அவர்தான் இணைந்து பயணிக்கும் யோசனையை முன்வைத்திருக்கின்றார்.
வழமைபோல் செயல்படுவதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்திருகின்றனர்.
இவ்வாறு இணக்கம் தெரிவித்திருப்பவர்களே தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஏனையவர்களைத் தாக்கி பேசுவதற்கான பிள்ளையார் சுழியையும் இடுவர்.
உண்மையில், இணங்கிச் செயல்படுவதென்றால் என்ன?
தமிழரசு கட்சியினர் ஏனைய கட்சிகளுடன் இணங்கிச் செயல்படுவதாக அவ்வப் போது கூறிக்கொண்டாலும்கூட அந்த இணக்கத்தைத் தொடர முடியாதவாறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துபவர்களும் அவர்கள்தான்.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கடிதம் எழுதும் விடயத்தில் ஆரம்பத்தில் உடன்பாட்டை வெளிப்படுத்திய மாவை சேனாதிராசா, பின்னர் அதிலிருந்து நழுவிக் கொண்டார்.
இறுதியில் ஐந்து கட்சிகள் தனியாகவும் தமிழரசு கட்சி தனியாகவும் கடிதங்களை அனுப்பியிருந்தது.
அனைவருமே ஒரு விடயத்தைதான் வலியுறுத்தப் போகின்றனர் என்றால் – அதனை ஏன் அனைவருமாக இணைந்து முன்னெடுக்க முடியாது?
இந்த இடத்தில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பயணிக்கும் முடிவை தமிழரசு கட்சியால் ஏன் கைக்கொள்ள முடியவில்லை?
இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயல்படும் விடயத்திலும் தமிழரசு கட்சியே அவசரப்பட்டு தன்னிச்சையாக முடிவெடுத்து அதனை வெளிப்படுத்தியது.
ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதில் கரிசனை உள்ளவர்கள் அவ்வாறானதொரு முடிவை எடுப்பதற்கு முன்னர் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை அழைத்து கலந்துரையாடியிருக்க வேண்டுமல்லவா!
கூட்டமைப்பை எவ்வாறு முன்கொண்டு செல்ல வேண்டும் – அதற்கான தந்திரோபாயங்கள் என்ன? – என்பது தொடர்பில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவெடுத்திருக்க வேண்டும் – ஏனெனில், 2004ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக தமிழரசு கட்சியின் சின்னமே பயன்படுத்தப்பட்டது.
மக்கள் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் கூட்டமைப்பையே தங்களின் அரசியல் கட்சியாக அங்கீகரித்திருந்தனர்.
கூட்டமைப்புக்கான ஆதரவின் மூலமே தமிழரசு கட்சி மக்கள் மத்தியில் சாகாமல் இருந்தது.
ஏனெனில், மறந்து போய்கிடந்த தமிழரசு கட்சி 2004 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் மறுபடியும் மக்களுக்கு அறிமுகமானது.
மக்கள், கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலேயே வீட்டு சின்னத்துக்கு வாக்களித்திருந்தனர்.
ஆனால், தமிழரசு கட்சி ஏனையவர்களுடன் ஆலோசிக்காமலேயே தன்னிச்சையாக வெளியேறும் தீர்மானத்தை மேற்கொண்டது.
இணங்கிச் செயல்படுவதில் அக்கறையிருப்பவர்கள் ஒருபோதுமே இவ்வாறு செயல்பட்டிருக்க மாட்டார்கள்.
தொழில்நுட்ப காரணங்களுக்காக – அதாவது, உள்ளூராட்சி தேர்தல் முறைமையிலுள்ள சிக்கல்களை கருத்தில்கொண்டு ஒரு தந்திரோபாய தீர்மானத்தை நாம் கைக்கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்தால் அதனை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடியல்லவா மேற்கொண்டிருக்க வேண்டும்.
எந்தக் கோணத்தில் நோக்கினாலும் இணங்கிச் செயல்பட வேண்டும் என்னும் எண்ணம் தமிழரசுக் கட்சியினர் மத்தியில் காணப்படவில்லை.
ஒருவேளை மாவை சேனாதிராசாவிடம் இருந்திருக்கலாம்.
ஆனால், மாவை சேனாதிராசாவின் குரலுக்கு கட்சிக்குள் முக்கியத்துவம் இல்லை.
இப்போதும் மாவையால் முன்வைக்கப்பட்டிருக்கும் இணங்கிச் செயல்படுவதற்கான யோசனை, பின்னர் கருத்தில் கொள்ளப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதமுண்டு.