மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தென்கொரிய முதலீட்டாளர்கள் வருகை!



மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களின் கோரிக்கை அமைவாக தென்கொரிய முதலீட்டாளர்கள் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி காலமதி பத்மராஜா  தலைமையிலான  குழுவினர் தென்கொரிய முதலீட்டாளர்களுடனான  கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நேற்று (10) இடம்பெற்றது .

இதன்போது  மட்டக்களப்பு மாவட்டத்தில்  இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்கள்  மற்றும்  பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், மாவட்டத்தில் உள்ள வளங்களை தென் கொரிய முதலிட்டாளர்கள் அறிந்துகொள்ளுவதற்காக மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமாரினால்   முன்னறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.  

மாவட்டத்தின் பிரதான  உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி  திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினர்.

அத்துடன்  மாவட்டத்தில்  சூரிய மின்சார உற்பத்திக்கு  உகந்த  காலநிலை காணப்படுவதனால் களப்பில் மிதக்கும் மின்கலங்களினால்  மின்சாரம் உற்பத்தி மேற்கொள்ள துறை சார் நிபுணர்களினால் கருத்துக்கள் பரிமாரப்பட்டது.

இந்நிகழ்வில் தென்கொரிய அரசாங்கத்தின் வெளிநாட்டு முதலீடுகளுக்கான பொறுப்பதிகாரி  கலாநிதி ஜெ.எச்.லி, பணிப்பாளர் சீயோல் கியூ லீ, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜீவரன்   மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, தவிசாளர் அத்துல  பி.அபயகோன் , இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் உதவி பணிப்பாளர்  ஷிரான் ரத்நாயக்க,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புதியது பழையவை