போதைப்பொருளுக்கு அடிமையான இலங்கை காவல்துறை -வெளியான தகவல்ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான காவல்துறை உத்தியோகத்தர்களை இனங்கண்டு கைது செய்வதற்கு காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

காவல் நிலையங்களில் இவ்வாறான போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க புலனாய்வு அதிகாரிகளை ஈடுபடுத்துமாறும் காவல்துறை மா அதிபர் அனைத்து சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

கஞ்சா குடித்து பிடிபடும் காவல்துறை அதிகாரிகளுக்கு முதற்கட்டமாக இடமாற்றம் வழங்கப்படும் என்றும், ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் அருந்திய காவல்துறை அதிகாரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி காவல்துறையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதுவரை ஜூனியர் காவல்துறை உத்தியோகத்தர்கள் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, மேலும் கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பயிற்சி உப பரிசோதகர்களும் உள்ளடங்குகின்றனர்.


போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் அதிகாரிகளில் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பிடிபடுவதாக காவல்துறை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இராணுவத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகம் உள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அண்மையில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் மற்றும் இராணுவ காவல்துறை படையைச் சேர்ந்த ஒரு சிப்பாய் ஐஸ் குடித்த குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை